சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கு விண்வெளியில் இருந்து வந்த வாழ்த்துச் செய்தி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கு விண்வெளியில் இருந்து ஒரு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது.
Image Credit:NASA
Image Credit:NASA
Published on

வாஷிங்டன்,

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கு விண்வெளியில் இருந்து ஒரு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இத்தாலியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோ போரெட்டி, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் வீராங்கனை சமந்தா இஸ்ரோவின் லட்சிய திட்டமான ககன்யான் பணி குறித்தும் பேசினார்.

அவர் தெரிவித்துள்ள செய்தியில், "இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் பல தசாப்தங்களாக சர்வதேச நிறுவனங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து பல விண்வெளி மற்றும் அறிவியல் பணிகளில் பணியாற்றி வருகின்றன. அந்த ஒத்துழைப்பு இன்றும் தொடர்கிறது.

பேரிடர்களைக் கண்காணிக்க உதவும் வகையில் "நிசார்" புவி அறிவியல் இயக்கத்தின் வளர்ச்சியில் இஸ்ரோ செயல்படுகிறது. இந்த திட்டம் நமது மாறிவரும் காலநிலையை நன்கு புரிந்துகொள்ள உதவும்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டப் பணியில் இஸ்ரோ செயல்படுவதற்கு நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பிற அனைத்து ஏஜென்சிகளின் சார்பாக, நான் வாழ்த்த விரும்புகிறேன்.

இஸ்ரோவுடனான கூட்டுறவை விரிவுபடுத்துவதும், பிரபஞ்சத்தை ஒன்றாக ஆராய்வதும் நம் அனைவருக்கும் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கான இலக்காகும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com