தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதில் மோடி உறுதி - ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேச்சு

‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதில் மோடி உறுதி - ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேச்சு
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி முதல் மாதம் ஒரு முறை மன்கி பாத் (மனதின்குரல்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் உரை ஆற்றி வருகிறார்.

அந்த வழக்கத்தின்படி நேற்று 53-வது முறையாக உரை ஆற்றிய அவர், சமீபத்தில் காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக நடத்திய கார் குண்டு தாக்குதலில் பலியான வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அப்போது அவர் பயங்கரவாதிகள் தாக்குதலால் மக்கள் மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்துள்ளனர். தேசிய போர் நினைவுச்சின்னம் என்று ஒன்று இல்லை என அறிய வந்தபோது அது வியப்பும், வேதனையும் அளித்தது. நாட்டுக்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தவும், அவர்களின் வீரதீரத்தைப் போற்றவும், அத்தகைய நினைவுச்சின்னம் தேவைப்படுகிறது என்றார்.

(இப்போது ஒரு நினைவுச்சின்னம், டெல்லியில் இந்தியா கேட் அருகே உருவாக்கப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்).

இந்த உரையின்போது, நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச வருவேன் என்ற உறுதியான நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார்.

அப்போது அவர், அடுத்த 2 மாதங்களுக்கு நாங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்போம். நானும் அதில் ஒரு வேட்பாளராக களத்தில் நிற்பேன். ஜனநாயகத்தின் உயர்ந்த மரபுகளை மதிக்கிற வகையில், அடுத்த உரை 2019-ம் ஆண்டு மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இடம் பெறும். புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும், உங்கள் ஆசிகளுடனும் நான் மே மாதம் மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு வருவேன். அதை பல வருடங்களுக்கு தொடர்வேன் என குறிப்பிட்டார்.

மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு புகழாரம் சூட்டிய பிரதமர், 1970-களில் நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததற்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மறைமுகமாக சாடினார்.

இது பற்றி அவர் பேசியபோது கூறியதாவது:-

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக, நெருக்கடி நிலைக்கு எதிராக மொரார்ஜி தேசாய் தாமே களத்தில் குதித்தார். இதற்காக அந்த முதிய வயதில் அவர் ஒரு பெரிய விலையை கொடுக்க வேண்டியதிருந்தது. அப்போது இருந்த அரசு அவரைக் கைது செய்தது. அவரை சிறையில் அடைத்தது.

1975-ம் ஆண்டு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததின் மூலமாக ஜனநாயக படுகொலை நடந்தபோது, எதிர்காலத்தில் ஒருபோதும் அப்படி நேரக்கூடாது என்பதை அவர் உறுதி செய்தார்.

அவரது ஆட்சிக்காலத்தில்தான் 44-வது அரசியல் சாசன திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில் நெருக்கடி நிலையின்போது கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தின் 42-வது திருத்தம், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்களைக் கூட குறைத்து விட்டது.

44-வது அரசியல் சாசன திருத்தமானது, நாடாளுமன்ற, சட்டசபை நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு செய்தித்தாட்கள் வழியாக பகிரங்கமாக்குவதை கட்டாயம் ஆக்கியது.

சுப்ரீம் கோர்ட்டின் பறிக்கப்பட்ட அதிகாரங்களை திரும்ப மீட்டெடுத்தது.

மத்திய மந்திரிசபையின் எழுத்துப்பூர்வமான பரிந்துரை பேரில், ஜனாதிபதி மட்டுமே நெருக்கடி நிலையை கொண்டு வர முடியும் என்று முதன்முதலாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டது. அது மட்டுமல்ல, நெருக்கடி நிலையை தொடர்ந்து 6 மாத காலத்துக்கு மேல் நீட்டிக்க முடியாது என்ற அம்சமும் சேர்க்கப்பட்டது.

ஜனநாயகத்தின் புனிதத்தை காத்ததில் மொரார்ஜி தேசாயின் விலை மதிப்பற்ற பங்களிப்பை இனி வரும் தலைமுறையினரும் என்றென்றும் நினைவுகூர்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com