

புதுடெல்லி,
கொரோனா எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த வாரம் பிராங்க்ளின் டெம்பிள்டன் என்ற மியூச்சுவல் பண்ட் நிறுவனம் 6 திட்டங்களை நிறுத்தியது. இது கடந்த 23ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. நெருக்கடியான சூழ்நிலையில், திட்டங்களை நிறுத்தி, முதலீட்டாளர்களுக்கு அவர்களது தொகையை திருப்பி தருவது சிறந்தது என நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று அதன் தலைவர் சஞ்சய் சாப்ரே கூறினார். இதனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வகை செய்வதற்காக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடங்காமல் தொடர்ந்து இயங்க வழிவகை செய்யப்படும்.