

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் வன்முறையை பரப்புவதற்காக பயன்படுத்தப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 22 சமூக வலைதளங்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், அடையாளம் தெரியாத இடத்திற்கு 2 இளைஞர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர். அவர்களுடன் ராணுவ உடையணிந்த தீவிரவாதிகள் உள்ளனர். அவர்கள், இரு இளைஞர்களையும் குச்சிகள் கொண்டு கடுமையாக அடிக்கின்றனர்.
நீர் உள்ள வாளியில் இருவரது தலைகளையும் மூழ்க செய்கின்றனர்.
உள்ளூர் போலீசில் சிறப்பு காவல் அதிகாரிகளாக தேர்வாவதற்காக பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிப்பவர்களாக செயல்பட்டுள்ளனர் என தீவிரவாதிகள் இந்த இரு இளைஞர்கள் மீதும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த கொடுமைகள் பொறுக்க முடியாமல் தங்களுக்கு கருணை காட்டும்படி அவர்கள் கேட்டு கொள்வதும், தீவிரவாதிகளின் குற்றச்சாட்டுகளை அவர்கள் ஒத்து கொள்வதும், அதன்பின் அவர்கள் விடுவிக்கப்படுவதும் வீடியோவில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.