

ஸ்ரீநகர்/புதுடெல்லி,
காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வருவதாக தகவல்கள் வெளியாகியது. காஷ்மீரில் அமைதியின்மை ஏற்பட்ட போது பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகளிடம் பெற்ற பணத்தை கல்வீச்சாளர்களுக்கு வழங்கியதாகவும், இளைஞர்களை வன்முறைக்கு தூண்டியதாகவும் தகவல்கள் வெளியாகியது. பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பிரிவினைவாத தலைவர்களுக்கு பணம் வருவது தொடர்பாக மீடியாக்களில் ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகியது.
இதனையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்தது. முதல்கட்ட விசாரணையில் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வந்தது என்பது தொடர்பான முகாந்திரம் தென்பட்டது.
தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.), நயீம் கான், பரூக் அகமது தார், ஹாஜி ஜாவேத் பாபா ஆகிய 3 பிரிவினைவாத தலைவர்களை கைது செய்தது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது, தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து நிதி வசூலிப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள், ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்இதொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீது தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்தது. கிலானி மற்றும் மிர்வாஸ் தலைமையில் இயங்கும் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாடு, ஹிஸ்புல் முஜாகிதின் மற்றும் துகாதரான் இ மிலாத் உள்ளிட்ட இயக்கங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து விசாரணை தீவிரம் அடைந்தது. இதனையடுத்து டெல்லி, அரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு பிரிவு அதிரடி சோதனையில் ஈடுபட்டது. தேசிய புலனாய்வு பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கியது. வங்கி கணக்குகள், ரூ. 2 கோடி பணம், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களிடன் கடித நகல்கள் மற்றும் பல முக்கிய தகவல்கள் சிக்கியது. பயங்கரவாத நிதியகம், கல்வீச்சாளர்களுக்கு பணம், பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டவர்களை வேட்டையாட தொடங்கியது தேசிய புலனாய்வு பிரிவு.
இவ்வழக்கில் தேசிய புலனாய்வு பிரிவு, பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் பெற்ற வழக்கில் காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் கிலானியின் மருமகன் அல்தாப் அகமது ஷாக் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளது. அல்தாப் அகமது ஏற்கனவே காஷ்மீர் போலீசின் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். கடந்த மாதம் ரமலான் கொண்டாடப்பட்டதும் அவரை தடுப்பு காவலில் வைத்தது போலீஸ். அதிரடி நடவடிக்கையின் போது அல்தாப் அகமதுவுடன் கிலானியின் நெருங்கிய உதவியாளர் அயாஸ் அக்பர் (தெரிக்-இ-ஹூரியத் செய்தித்தொடர்பாளார்) பீர் சாய்புல்லாக் ஆகியோரை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்து உள்ளது.
ஹூரியத் மாநாட்டின் செய்தித் தொடர்பாளர் ஷாகித்-உல்-இஸ்லாம் கைது செய்யப்பட்டார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.