

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி வருகிறது என செய்தி மீடியாக்கள் புலனாய்வில் தெரியவந்தது. இதனையடுத்து இதுதொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவு தொடங்கியது. தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையில் பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி பெறப்பட்டது தொடர்பான தகவல்கள் உறுதியானது.
இதனையடுத்து டெல்லி, ஜம்மு காஷ்மீரில் அதிரடி ரெய்டுகள் மற்றும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இப்போது பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத செயல்பாட்டிற்கு நிதிஉதவி தொடர்பான விசாரணையில் அம்மாநிலத்தை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. சேயிக் அப்துல் ராஷித்திற்கு தேசிய புலனாய்வு பிரிவு சம்மன் விடுத்து உள்ளது. அக்டோபர் 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்து உள்ளது. பயங்கரவாத நிதியகம் விவகாரத்தில் முதல் முறையாக தேசிய புலனாய்வு பிரிவு முக்கிய அரசியல்வாதிக்கு நோட்டீஸ் விடுத்து உள்ளது.
பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு பணம் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே சிக்கிய தொழில் அதிபர் ஜாகூர் வதாலியை தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்த போது எம்.எல்.ஏ. சேயிக் அப்துல் ராஷித்திற்கு தொடர்பு தெரியவந்து உள்ளது.
இருப்பினும் எம்.எல்.ஏ. ராஷித் பயங்கரவாத நிதியகம் தொடர்பான குற்றச்சாட்டை மறுத்து உள்ளார், இதுதொடர்பாக விசாரிக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொண்டு உள்ளார்.
பயங்கரவாத நிதியகம் தொடர்பாக பிரிவினைவாதிகள் உள்பட பலருக்கு எதிராக மே மாதம் 30-ம் தேதி தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்தது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.