

மும்பை,
நரேந்திர மோடி பிரதமரான பின்னர் இந்திய ரூபாயின் மதிப்பு மோடியின் தாயார் வயதுக்கு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று ராஜ்பாப்பர் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சி.பி.ஜோஷி, பிரதமர் மோடி, உமா பாரதி ஆகியோர் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இந்து மதம் பற்றி தெரியாது என்று கருத்து தெரிவித்தார். இதனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்ததும், ஜோஷி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
இப்போது மற்றொரு காங்கிரஸ் தலைவர் கட்சியை சங்கடப்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் பரம்பரை பற்றி ஒரு சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி விலாஸ் முத்தெம்வார் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மோடியை பிரதமர் ஆவதற்கு முன்பு யாருக்கு தெரியும். ஏன், இப்போதும் அவரது தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ராகுல் காந்தியின் தந்தையை அனைவருக்கும் தெரியும் என்றார்.
அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து முத்தெம்வாரிடம் கேட்டபோது, அது ஒரு உள்கட்சி கூட்டம். நான் பேசியதை வீடியோ எடுத்தவர் அதனை திருத்தி வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளார். ராகுல் காந்தியின் முந்தைய தலைமுறை பற்றி உலகுக்கே தெரியும். ஆனால் பலருக்கு மோடியின் தந்தை பற்றி தெரியாது என்றுதான் பேசினேன். இது உண்மை தான் என்றார்.