

சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது இதனால் நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்க அ.தி.மு.கவும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனையில் இழுபறி நீடித்தது. இதை தொடர்ந்து மாலை நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுசாமி நிராகரித்தார்.
தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் போட்டியிட விருப்பம் தெரிவித்தால், அவருக்கு தேர்தல் நடைபெறும் தொகுதியில் இருந்து 10 பேர் முன்மொழிய வேண்டும். அவர்களிடன் வாக்காளர் அடையாள அட்டை எண் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட வேண்டும். அந்த வகையில் விஷாலுக்கு 10 பேர் முன்மொழிந்தனர். ஆனால் அதில் 3 பேருடைய கையெழுத்து போலியானது என கூறப்பட்டது. இதனையடுத்து நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறிந்த விஷால் தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்க சென்றார்.
பின்னர் நடிகர் விஷால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு மீண்டும் நடிகர் விஷால் சென்று, தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார். வேட்புமனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களை மிரட்டி, எனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்துள்ளனர் என விஷால் குற்றம் சாட்டினார். முறையாக விசாரணை நடத்த வேண்டும், அது வரை என் மனு மீது நடவடிக்கை எடுக்க கூடாது என அவருடைய தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து வேட்புமனுவில் விஷாலை முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களை மிரட்டியதாக ஆடியோ ஆதாரம் ஒன்றை அவர் வெளியிட்டார்.
இதற்கிடையே வேட்புமனு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்ற இடத்தில் விஷால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்குள், நடிகர் விஷால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் அதிகாரியிடம் தன்னுடைய கோரிக்கையை விஷால் முன்வைத்தார். கையெழுத்திட்டவர்களை மிரட்டியதாக ஆடியோ ஒன்றை அவரது தரப்பில் வெளியிடப்பட்ட நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலில் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பின்னர் பேசிய விஷால் ஆதாரத்தின் அடிப்படையில் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்றார்.