

கட்டாக்,
ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் கோலராபூலியா கிராமத்தில் வசித்து வருபவர் தபன் சிங் (வயது 35). இவருடைய தாய் ராய்மணி சிங் (வயது 55). பெட்நோட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மனைவி மற்றும் தாயுடன், தபன் சிங் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் தபனின் மனைவிக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அது குணமடையவில்லை. மனைவி மீது அதீத பாசம் வைத்திருந்த தபன், இதற்கு அவருடைய தாய்தான் காரணம் என நினைத்துள்ளார்.
அவர்தான் மனைவிக்கு மாந்திரீகம் வைத்து விட்டார் என நம்பியுள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்த தபன், அதுபற்றி எதுவும் விசாரிக்காமல் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், மனைவியின் நோய் பாதிப்பு சரியாகாத வேதனையிலும், சந்தேகத்திலும் இருந்த தபன் அவருடைய தாயை தாக்கி படுகொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்து சென்ற போலீசார் தபனை கைது செய்து, தபனின் தாயின் உடலையும் கைப்பற்றினர்.
இதுபற்றி காவல் ஆய்வாளர் சஸ்மிதா மொஹந்தோ இன்று கூறும்போது, மனைவிக்கு தாய் மாந்திரீகம் வைத்து விட்டார் என்ற சந்தேகத்தில் அவரை தபன் கொலை செய்து விட்டார். உயிரிழந்த தபனின் தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பி.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.