இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது

3 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது.
இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது
Published on

புதுடெல்லி

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) ஆட்சி நடத்தி வந்தது.

ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 2 மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

காங்கிரசின் இந்த வெற்றியால் இந்தியாவின் அரசியல் வரை படத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

மே 2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணிகட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் 21 ஆக இருந்தது. தற்போது அதில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

பா.ஜ.க. ஆட்சி நடக்கும் 21 மாநிலங்களில் 10 மாநிலங்களில் பா.ஜ.க. தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தி வந்தது.

அருணாசலபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் தற்போது கர்நாடகம்.

இதில் கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தள ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்து வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

அருணாசல பிரதேசம், குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் பாரதீயஜனதா ஆட்சி நடைபெறுகிறது.

6 மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் உதவியுடன் பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது.

அசாம் (அசாம் கன பரிஷத், போடடோ லேண்ட் கட்சிகள் ஆதரவு),கோவா (கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டி ராவாடி கோமந்தக் கட்சிகள் ஆதரவு), ஜார்க்கண்ட் (அகில ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் ஆதரவுடன்), மராட்டியம் (சிவசேனா ஆதரவுடன்) மணிப்பூர் (நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் லோக் ஜனசக்தி ஆதரவுடன்) திரிபுரா (திரிபுரா மக்கள் முன்னணி)

பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் நடைபெற்ற வந்த 5 மாநிலங்களில் காஷ்மீரில் தற்போது கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் (ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு), நாகலாந்து (நாகா மக்கள் முன்னணிக்கு ஆதரவு) சிக்கிம் (சிக்கம் ஜன நாயக முன்னணிக்கு ஆதரவு) மேகலயா( தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு) பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி செய்யும் மாநிலங்கள் 4 ஆக குறைந்து உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்

மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் : தமிழ்நாடு-(அ.தி.மு.க,) ஆந்திரா-(தெலுங்கு தேசம்) கேரளா-( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு) மேற்கு வங்காளம் -(திரிணாமுல் காங்கிரஸ்) ஒடிசா (பிஜூ ஜனதாதளம்) தெலுங்கானா- (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி)

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com