பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு; நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது.
பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு; நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்த உரையை விவசாயிகள் போராட்டத்தை காரணம் காட்டி 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

பிப்ரவரி 1-ந் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.அதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மீது தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி 4 நாட்கள் நடந்த தொடர் அமளியால் சபை முடங்கியது. முதல் அமர்வுக்கு பின்னர் மாநிலங்களவை பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், மக்களவை 13-ந் தேதியும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. இந்த அமர்வின் முக்கிய நோக்கம், 2021-22 நிதி ஆண்டுக்கான பல்வேறு மானியங்களுக்கான கோரிக்கைகளை, நிதி மசோதாவுடன் நிறைவேற்றுவதாகும். அத்துடன் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (திருத்தம்) மசோதா, நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி மசோதா, மின்சார (திருத்தம்) மசோதா, கிரிப்டோ நாணயம் மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயம் ஒழுங்குபடுத்தும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்கள் கவனத்தை செலுத்துகிற சூழலில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு நடக்கிறது. எனவே மூத்த அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் குறைவு என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் விவாதங்களில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், அடுத்த மாதம் 8-ந் தேதி முடிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com