ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு உரிமை உண்டு - சோனியா காந்தி

ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு உரிமை உண்டு - சோனியா காந்தி
Published on

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. அதனையடுத்து காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தினர். டெல்லியில் வாகனங்கள் தீவைக்கப்பட்டன.

போராட்டம் நடத்துபவர்கள் மீது அரசாங்கம் வன்முறை நிகழ்த்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இது குறித்து பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு உரிமை உண்டு. பாஜக அரசு மக்களின் குரலை புறக்கணித்து அவர்கள் மீது அடக்குமுறையை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

போராடும் மக்கள் மீதான வன்முறைகளை அரசு கைவிட வேண்டும். மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய இரண்டும் ஏழை எளிய மக்களை துன்புறுத்தக் கூடியவையாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்டதைப் போல மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

மக்களுக்கு எழும் ஐயங்கள் நியாயமானவை. இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com