

புதுடெல்லி,
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்ய தடை விதித்தும், இத்தகைய வழக்குகளில் அரசு ஊழியர்களை கைது செய்வதற்கு முன்பாக, துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறைவு இல்லாத அதிகாரி கண்டிப்பாக முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினர்.
அத்துடன் உரிய உயர் அதிகாரியின் ஒப்புதலை முன்கூட்டி பெற்றுத்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஏதும் அறியாத அப்பாவி மக்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசு சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று தமிழக அரசு தரப்பில், அரசு வக்கீல் யோகேஷ் கண்ணா சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சமூகத்தில் மக்களின் நலனை பாதுகாப்பது மாநில அரசின் கடமையாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்காக்கும் வகையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தாழ்த்தப்பட்டவர்களின் சாதகமான அம்சங்களை நீர்த்து போக செய்யும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் இந்த தீர்ப்பு உள்ளது.
எனவே தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.