கொரோனா பாதிப்புகள் குறித்து ஆங் சான் சூச்சியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா பாதிப்புகள் குறித்து மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சியுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பாதிப்புகள் குறித்து ஆங் சான் சூச்சியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Published on

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் தற்போது வரை 32,49,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு 2,29,543 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 1075 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சியை இன்று தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள மியான்மர் குடிமக்களுக்கு, இந்திய அரசு இயன்றவரை அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்த பிரதமர் மோடி, மியான்மரில் உள்ள இந்திய மக்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அளித்து வரும் ஒத்துழைப்புக்காக அரசின் ஆலோசகருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், கொரோனா பெரும் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் சுகாதார சவால்கள் குறித்து இருவரும் ஆலோசித்தோம். இக்கட்டான நிலையில் மியான்மருக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் உள்நாட்டிலும், உலக அளவிலும் ஏற்பட்டுள்ள நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும், இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவலை இருவரும் பகிர்ந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com