

புதுடெல்லி,
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கீ பாத் (மனதில் குரல்) என்னும் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த ஆண்டின் முதல் உரையை இன்று நிகழ்த்தினார். ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அவர் பேசும்போது, நாட்டில் பெண்களின் சக்தி, அனைத்து துறைகளிலும் அவர்கள் ஈட்டும் சாதனை, பத்ம விருதுகள் மற்றும் காந்தி ஜெயந்தி குறித்து பேசினார்.
பிரதமர் மோடி பேசுகையில், சில நாட்களுக்கு முன்பு நாட்டின் உயரிய குடியரசு தின விழாவை கொண்டாடினோம். அதில் வரலாற்றிலேயே முதன்முறையாக 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். நாட்டில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா முன் உதாரணமாக திகழ்கிறார். அவரை இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டும். அவர் அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கும் மிக வலிமையான செய்தி ஒன்றை விட்டுச் சென்று இருக்கிறார். வலிமையான மனம் இருந்தால், பெண்களால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை என்ற செய்திதான்.
ஏராளமான வேத நூல்கள் பெண்களால் எழுதப்பட்டு இருக்கின்றன. நமது கலாச்சாரத்தில் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் குழந்தை 10 ஆண் குழந்தைகளுக்கு சமம் என பழமைவாய்ந்த சமஸ்கிருதம் கூறுகிறது.
இந்தியா வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமானால் ஆண்களுடன், பெண்களும் தோளோடு தோள் நின்று பீடு நடை போட வேண்டும்.
தற்போது பெண்கள் பல துறைகளில் முன்னிலையில் இருந்து தலைவர்களாக உருவாகி வருகின்றனர். பல துறைகளில் பெண்கள் சக்தி முக்கிய பங்கு வகித்து புதிய மைல்கல் சாதனைகள் படைத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பெண் திறமையாளர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து உரையாடினர். மும்பையில் மாதுங்கா ரெயில் நிலையத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களே பணிபுரிகிறார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட டேன்டீ வாடா பகுதியில் பெண்கள் இ-ரிக்ஷாக்களை ஓட்டி தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கியுள்ளனர்.
அதன்மூலம் அப்பகுதியின் சுற்று சூழலும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்றார்.