

ஷீரடி
மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகர் மாவட்டத்தில் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.
தரிசனத்திற்கு பிறகு அவர் அங்குள்ள புத்தகத்தில் எழுதியதாவது. சாய்பாபாவின் தரிசனத்திற்குப் பிறகு நான் மிகுந்த சமாதானத்தை உணர்ந்தேன். விசுவாசம் மற்றும் பொறுமை அவரது செய்தி முழு மனித குலத்திற்கு உதவியது. "சாய்பாபாவின் அனைத்து பக்தர்களும் அவருடைய ஆசீர்வாதங்களை பெற்று மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் அடைவார்கள் என்ற விருப்பத்துடன் சாய்பாபாவின் கால்களை முன் வணங்குகிறேன் என எழுதி உள்ளார். பின்னர் சாய்பாபா உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை வெளியிட்டார். பின்னர் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைப் வழங்கினார்.
விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-
நாட்டில் இதற்கு முன் ஆண்ட அரசுகள் ஏழைகளின் நலனில் அக்கறை காட்டவில்லை. வறுமையை ஒழிக்க தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை உயர்த்திக்கொள்வதே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர்.
பாஜக தலைமையில் மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கும், இதற்குமுன் இருந்த ஆட்சிக்கும் இருக்கும் வேறுபாடு, மக்கள் நலப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதாகும், வளர்ச்சிப் பணிகளை அக்கறையுடன் செய்வதாகும்.
இந்த மகாராஷ்டிரா மண் ஏராளமான சமூக சீர்திருத்தவாதிகளை நாட்டுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது. இவர்களால் நாட்டின் ஒற்றுமை சீர்குலையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று சிலர் அரசியல் ஆதாயத்துக்காகச் சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக முறையான குடியிருப்புகளைக் கட்டிக்கொடுக்க மிகவும் அர்ப்பணிப்போடு பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. கடந்த காலங்களிலும் இதுபோல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட, துரிதிர்ஷ்டவசமாக ஏழைகளின் நிலையை உயர்த்துவதற்குப் பதிலாக ஒரு குடும்பத்தின் பெயரை உயர்த்திக்கொள்வதே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். அவர்களின் முக்கிய இலக்கு வாக்கு வங்கிதான்.
எங்களுடைய இலக்கு, நாட்டின் 75-வது சுதந்திரதின விழா கொண்டாடும் போது, 2022-ம் ஆண்டுக்குள் நாட்டில் வீடு இல்லாத ஒருவரும் இருக்கக்கூடாது என்பதை உருவாக்குவதுதான். ஏழைகளின் நிலையை உயர்த்திக் கொள்ள தீவிரமாக முயற்சிகள் செய்து வருகிறோம். இப்போதுள்ள அரசின் முக்கிய நோக்கம், ஏழைகளின் நலன் மட்டுமே. ஏனென்றால், வறுமை ஒழிப்புத் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
கடந்த ஆட்சியில் ஏழைகளுக்காக 4 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பின் 1.25 கோடி வீடுகள் கடந்த 4 ஆண்டுகளில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் அரசு இந்த எண்ணிக்கையில் வீடுகளைக் கட்டுவதற்கு ஏறக்குறைய 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருக்கும் ஆனால், நாங்கள் 4 ஆண்டுகளில் இதைச் செய்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.