

புதுடெல்லி,
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய ஜோ ஜோசப் மனு, கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி கொச்சியை சேர்ந்த சுரக்ஷா அறக்கட்டளை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஆகியற்றை இணைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக விசாரிக்கப்படவேண்டிய அம்சங்களை கண்டறிந்து, அவை குறித்து எழுத்துப்பூர்வமாக பிப்ரவரி 4-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழகம், கேரளா, மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 2-வது வாரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.
இதற்கிடையே மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 25-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.