

புதுடெல்லி
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம் நாளை சிறந்த நிர்வாக தினமாக நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்தியா அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.
இந்த விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் அவரது பெயர் தேவநகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் அவரது தோற்றம், மறைவு ஆண்டுகள் இடம் பெற்றிருக்கும் என்றும், மறுபுறத்தில் சிங்க சின்னமும், அதற்கு கீழ் 100 ரூபாய் குறியீடும், சத்தியமேவ ஜெயதே என்ற தேவநாகரி எழுத்துகளும் இடம் பெற்றிருக்கும்.
இந்த நாணயம் வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பிரதமர் பேசியதாவது:-
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிற்பகுதியில் எதிர்க்கட்சி தலைவராக தனது அரசியல் வாழ்க்கையை செலவிட்டார், ஆனால் நாட்டையும் அதன் மக்களையும் எப்பொழுதும் நினைத்து கொண்டு இருந்தார்.
சிலருக்கு பதவி என்பது ஆக்சிஜனாக உள்ளது. அவர்களால் பதவி இல்லாமல் இருக்க முடியாது. அவர்களால் பதவி இல்லாமல் 2 அல்லது 5 வருடங்கள் இருக்க முடிவது இல்லை.
வாஜ்பாய், மக்களின் நலனுக்காக தனது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் செலவு செய்தார். கட்சியின் சித்தாந்தத்தின் மீது சமரசம் செய்ததில்லை.
அடல் ஜி கட்சியை செங்கல் செங்கல்களாக உருவாக்கினார் தற்போது அது உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக விளங்குகிறது. வாஜ்பாய் நாட்டில் தாமரை விதைகளை (பி.ஜே.பி சின்னம்) விதைத்து உள்ளார்.
அவர் பேசியபோது, நாடு பேசியது... அவர் பேசியபோது, அந்த நாடு கேட்டது. அடல் ஜி குரல் பாஜகவின் குரல் மட்டுமல்ல, அது சாதாரண மனிதனின் அபிலாஷைகளின் வெளிப்பாடு ஆகும் என கூறினார்.