அனல்மின் நிலையங்கள் முழு திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

கோடைகால மின்தேவையை சமாளிக்க முழு திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அனல்மின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அனல்மின் நிலையங்கள் முழு திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும், எதிர்பார்த்ததை விட வெயில் அளவு அதிகமாக உள்ளது. வெயில் அதிகரிப்பதால், மின்சாரத்தின் தேவையும் உயர்ந்து வருகிறது.

இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கான அதிகபட்ச மின்தேவை 230 ஜிகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 20-ந் தேதி, உச்சபட்ச மின்தேவை 205.52 ஜிகாவாட்டாக அதிகரித்தது. அன்றைய தினம் 4 ஆயிரத்து 281 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.

எனவே, மின்சார தேவை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு மத்திய மின்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

15 அனல்மின் நிலையங்கள்

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் இயங்கும் 15 அனல்மின் நிலையங்கள் தங்களது முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

டாடா பவர், அதானி மின்நிலையங்கள், எஸ்ஸார் மின்உற்பத்தி நிலையம், ஜே.எஸ்.டபிள்யூ ரத்னகிரி, மீனாட்சி எனர்ஜி உள்பட 15 அனல்மின் நிலையங்களுக்கு இதுதொடர்பான நோட்டீசை பிறப்பித்துள்ளது.

மின்தட்டுப்பாட்டை தவிர்க்கலாம்

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டின் கோடைகால மின்தேவை அதிகரித்து வருகிறது. ஆகவே, மார்ச் 16-ந் தேதியில் இருந்து ஜூன் 15-ந் தேதிவரை, தங்களது அனல்மின் நிலையங்கள், இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்தி, தங்களது முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி சய்ய வேண்டும்.

இதன்மூலம் கோடைகால மின்தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com