

புதுடெல்லி,
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஆளும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக சக்தி வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
இந்த நிலையில், இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:-
* அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.
* வாக்களிக்க தகுதியுள்ள 50 பேர் வேட்பாளரை முன்மொழிய வேண்டும், 50 பேர் வழிமொழிய வேண்டும்.
* நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும்.
* அவசர காரணங்களுக்காக வேறு இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்றால், 10 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
*மாநிலந்தோறும் சட்டப்பேரவைகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
*ஜூலை 24 ஆம் தேதியோடு ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைகிறது.
*காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
*ஜனாதிபதி தேர்தலுக்கு ஜூன் 28 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
*வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 1 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
*குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும்.
*வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ல் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.