

புதுடெல்லி,
இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம், காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச்செய்து கொடிய தாக்குதல் நடத்தினர்.
நாட்டையே உலுக்கி உள்ள இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எவ்வளவு தான் ஒளிந்து கொள்ள முயற்சித்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
புல்வாமாவில் நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு அனைவரும் மிகுந்த வேதனையில் இருப்பதை நான் அறிவேன். உங்களின் கோபத்தை நான் புரிந்து கொள்கிறேன். வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது என்றார்.