

புது டெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நகரின் ரோஹானியா பகுதியில் வைத்து கிசான் நியாய் பேரணி இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லி விமான நிலையத்தில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்டார். அவருடன் சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியும் உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பூபேஷ் பாகெல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடா ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் வைத்து இந்த பேரணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பேரணியில் பங்கேற்பதற்கு முன் கோயில்களின் நகரமான வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், கால பைரவர் கோவில் மற்றும் துர்காகுண்ட்டில் உள்ள மா துர்கா கோவில்களில் பிரார்த்தனை மேற்கொள்கிறார்.
உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் அவர் தங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்த முன்னேற்பாடு பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதிக்யா பேரணி எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த பேரணி, லகிம்பூர் வன்முறை சம்பவத்துக்கு பின் கிசான் நியாய் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.