ரபேல் விமான பேரம் : ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டாளியாக தேர்வு - மத்திய அரசு விளக்கம்

ரபேல் போர் விமான பேரத்தில் பிரான்சின் டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக தேர்வு செய்ததில் தங்களுக்கு பங்கு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ரபேல் விமான பேரம் : ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டாளியாக தேர்வு - மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

ரபேல் போர் விமான தயாரிப்பில், பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இந்தியாவின் அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு பரிந்துரை செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கருத்து தெரிவித்து உள்ளார்.

ரபேல் போர் விமான பேரத்தில் பிரதமர் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கி ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்த நிலையில், அதற்கு பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் கருத்து வலு சேர்ப்பதாக அமைந்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் ராணுவ அமைச்சகம் நேற்று ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:

ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பில், டசால்ட் நிறுவனத்தின் கூட்டாளியாக ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே வெளியிட்டு உள்ள அறிக்கை பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ள நிலையில், தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு நெருக்கமான நபர்களுடன் தொடர்புபடுத்தி கருத்து வேற்றுமைகளை எழுப்பி இந்த அறிக்கையை பிரான்ஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள நிலையில், அதை முழுமையாக பார்க்க வேண்டும். இது தொடர்பான அவரது அடுத்தடுத்த அறிக்கைகளும் பொருத்தமானவை.

இந்த பேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக தேர்வு செய்ததில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று ஏற்கனவே தெரிவித்தாகி விட்டது. மீண்டும் அதை வலியுறுத்திக் கூறியாகி விட்டது.

2005ம் ஆண்டே இது தொடர்பான கொள்கை முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது பலமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தொழிலை வளர்த்துக்கொள்வதற்காக பெரிய அளவிலான இறக்குமதியை கையாள்வதற்கு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஒரு ஏற்பாடு செய்யப்படுகிறது. இது ஒப்பந்த மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு கொள்கை வழிமுறைகளின்படி, அன்னிய அசல் உபகரண உற்பத்தியாளர், எந்தவொரு இந்திய நிறுவனத்தையும் கூட்டாளியாக தாராளமாக தேர்ந்தெடுக்க முடியும்.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், டசால்ட் நிறுவனத்துக்கும் இடையே கூட்டு செயல்திட்டம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது முழுக்க முழுக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான வணிக ஏற்பாடு ஆகும்.

முந்தைய அரசில், 126 போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு மிகக்குறைந்த விலை கேட்ட நிறுவனமாக டசால்ட் நிறுவனம் அறிவிக்கப்பட்ட 2 வாரங்களில் அந்த நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர ஒப்பந்தம் போட்டுள்ளதாக 2012ம் ஆண்டு பிப்ரவரியில் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டசால்ட் நிறுவனம் ஒரு ஊடக குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பல நிறுவனங்களுடன் கூட்டாளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வழிகாட்டும் விதிமுறைகள்படி, கடன் வாங்கும் நேரத்தில் அல்லது ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர், விற்பனை செய்பவர்தான் கூட்டாளி பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்.

எனவே இந்த பேரத்தில் இந்திய கூட்டாளியை டசால்ட் நிறுவனம் தேர்வு செய்ததில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை வலியுறுத்தி கூறுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com