

புதுடெல்லி,
தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார வல்லுனர் ரகுராம் ராஜன் (வயது 53), மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் (2013ம் ஆண்டு) இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2016 செப்டம்பர் மாதம் முடிந்தது. முன்னதாக இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர்கள் போல அல்லாமல், வெளிப்படையாக கருத்துகளை கூறியவர். ரகுராம் ராஜன் பதவி காலம் முடிவதற்கு முன்னதாக அவர் 2வது முறையாக கவர்னராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் அவரைப்பற்றி பா.ஜனதா எம்.பி., சுப்பிரமணிய சாமி எழுப்பிய தனிப்பட்ட விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து தான் 2வது முறையாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி ஏற்கப்போவதில்லை என்றும், பதவிக்காலம் முடிந்ததும் தான் மீண்டும் அமெரிக்கா சென்று கல்விப்பணியில் சேரப்போவதாகவும் கடந்த ஜூன் மாதம் ரகுராம் ராஜன் திடீரென அறிவித்தார். அதன்படி அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் ரகுராம் ராஜன். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ரகுராம் ராஜன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகியது.
இதனையடுத்து இந்தியாவில் ரகுராம் ராஜன் அரசியலில் களமிறங்கலாம் என யூகமும் எழுந்தது. இந்த செய்திகளுக்கு இடையே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவருடைய அலுவலகம் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. ரகுராம் ராஜனுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் கிடையாது என தெரிகிறது. ரகுராம் ராஜன் இந்தியாவில் கல்வி சார்ந்த பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார், சிகாகோ பல்கலைக்கழகத்தில் முழுநேர கல்வி பணியை விட அவரிடம் எந்தஒரு திட்டமும் கிடையாது, என அவருடைய அலுவலகம் தகவல் தெரிவித்து உள்ளது. ஆம் ஆத்மி மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு அரசியல் சார்பற்ற பிரபலங்களை களமிறக்க திட்டமிட்டு உள்ளது. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரகுராம் ராஜனை எம்.பி. ஆக்க விருப்பம் எனவும் தெரியவந்தது.