புலவாமா தாக்குதல் குறித்து அறிந்த பிறகும் மோடி படப்பிடிப்பில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி கண்டனம் - பா.ஜனதா மறுப்பு

புலவாமா பயங்கரவாத தாக்குதல் குறித்த தகவல் அறிந்த பிறகும் பிரதமர் மோடி படப்பிடிப்பில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்து உள்ளது.
புலவாமா தாக்குதல் குறித்து அறிந்த பிறகும் மோடி படப்பிடிப்பில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி கண்டனம் - பா.ஜனதா மறுப்பு
Published on

புதுடெல்லி,

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி பிற்பகலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் சர்வதேச அளவிலும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்டின் கார்பெட் தேசிய பூங்காவில் படப்பிடிப்பில் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சியினர், புலவாமா தாக்குதல் குறித்த செய்திகள் அறிந்த பிறகும், பிரதமர் மோடி படப்பிடிப்பை தொடர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை, பிரதான நேர மந்திரி என அழைத்து கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், புலவாமா தாக்குதலால் நாட்டு மக்களின் இதயத்திலும், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களிலும் கடலளவு வலி நிறைந்திருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியோ சிரித்துக்கொண்டு தண்ணீரில் படப்பிடிப்பை நடத்தி உள்ளார். 40 வீரர்கள் உயிரிழந்த தகவல் அறிந்தபிறகும் கூட, பிரதான நேர மந்திரி 3 மணி நேரம் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

தனது டுவிட்டுடன் போட்டோஷூட் சர்க்கார் என்ற ஹேஷ்டேக்கையும் ராகுல் காந்தி இணைத்து இருந்தார். மேலும் பிரதமர் மோடி படப்பிடிப்பில் ஈடுபட்ட புகைப்படத்தையும் அதில் அவர் பகிர்ந்து இருந்தார்.

இதைப்போல காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, புலவாமா தாக்குதலால் ஒவ்வொரு இந்தியனும் அன்றைய தினம் (14-ந்தேதி) இரவு உண்வை சாப்பிடாமல் இருந்த நேரத்தில், பிரதமர் மோடியோ பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் இரவு 7 மணிக்கும் தேநீரும், சமோசாக்களும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் என்று குற்றம் சாட்டினார்.

ஆனால் காங்கிரசாரின் இந்த குற்றச்சாட்டுகளை பா.ஜனதா மறுத்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் டுவிட்டர் தளத்தில், ராகுல்ஜி, உங்கள் பொய் செய்திகளை கேட்டுக்கேட்டு நாடு அலுத்துவிட்டது. அன்று (14-ந்தேதி) காலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து நாட்டை தவறாக வழிநடத்துவதை நிறுத்துங்கள். அன்று தாக்குதல் நடைபெறும் என உங்களுக்கு வேண்டுமானால் காலையிலேயே தெரிந்து இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு மாலையில்தான் தெரியும். அடுத்தமுறை இதைவிட சிறப்பாக முயற்சி செய்யுங்கள். அதில் வீரர்களின் தியாகத்தை இணைக்காதீர்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com