ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது. அதேபோல், திருமாவளவன் எம்.பியும் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (வயது 52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரசார் நேற்று இந்தியா முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள்.

எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தி மீதான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது.

அதேபோல் திருமாவளவன் எம்.பியும் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: " ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும்.

ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கும் ஆளும் கட்சியின் எண்ணம் இதில் தெளிவாகத் தெரிகிறது. எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது, கீழமை நீதிமன்றங்களில் அரசு தலையிடுவதை இது வெளிப்படுத்துகிறது. இந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை விவாதிக்க சபையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com