

புதுடெல்லி,
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார். பிரிட்டனுக்கு தப்பி சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா ஏற்கெனவே அறிவித்தது.
அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடனைத் திருப்பி செலுத்தாதது மட்டுமின்றி, பல்வேறு காசோலை மோசடி வழக்குகள், தொழில் செய்வதாக வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டில் சொத்து வாங்கியது, அன்னிய செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது உள்ளன. ஐடிபிஐ வங்கியில் ரூ.720 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாக கைது ஆணையை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில், விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும்படி பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில், பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவு வெளியிட்டது. லண்டன் அருகே ஹெர்ட்போர்ட்ஷைரில் விஜய் மல்லையா தங்கியிருக்கும் லேடிவால்க் அண்ட் பிராம்பிள் லாட்ஜ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தவும், மல்லையாவுக்கு சொந்தமான பொருள்களை கையகப்படுத்தவும் பிரிட்டன் உயர் நீதிமன்ற சட்ட அமலாக்க அதிகாரிக்கும், அமலாக்கத் துறை ஏஜெண்டுகளுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால், மல்லையா தங்கியிருக்கும் பகுதிக்குள் செல்வதற்கு போலீஸாரை பயன்படுத்துவதற்கும், பிரிட்டன் உயர் நீதிமன்ற சட்ட அமலாக்கத் துறை அதிகாரி மற்றும் அவரது கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் அமலாக்கத் துறை ஏஜெண்டுகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது, மல்லையாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் இந்திய வங்கிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் அரிஜித் பாசு, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இங்கிலாந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், இத்தகைய கோர்ட்டு உத்தரவுகளால், கடன் பாக்கி வசூலுக்காக விஜய் மல்லையாவின் சொத்துகளை நாங்கள் பின்தொடர முடியும் என்றார்.
இந்தியாவில் விஜய் மல்லையாவிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், விஜய் மல்லையாவின் இந்திய சொத்துகளை ஏலத்தில் விற்பனை செய்ததின் மூலம் வங்கிகள் கூட்டமைப்பு ரூ.963 கோடியை மீட்டு உள்ளது என பதில் அளித்தார்.