

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ககபோரா பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று புல்வமா மாவட்டத்தில் நடைபெற்ற போரட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் தாவ்ஷீப் அகமது என்ற இளைஞர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் ஸ்ரீநகரில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கன்யா, ரெயின்வாரி உள்ளிட்ட 7 காவல் நிலையங்களுக்குட்பட்ட இடத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.