தெலுங்கானா முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு- கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க ரேவந்த் ரெட்டி உரிமை கோரிய நிலையில், மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேர்லில் வெற்றி பெற்றால் தெலுங்கானா அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும், ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000, விவசாயத் தொழிலாளாகளுக்கு ஏக்கருக்கு ரூ.12,000 வழங்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது.

இதனால், அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற மட்டும் சுமார் ரூ.1 லட்சம் கோடி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே தெலுங்கானா அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், நிதி நெருக்கடி நிலையை சமாளித்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com