ஊரடங்கு சமயத்திலும் மராட்டியத்தில் ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடு; மராட்டிய சட்டசபையில் கவர்னர் உரை

சட்டசபை கூட்டு கூட்டத்தில் நேற்று உரையாற்றிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஊரடங்கு சமயத்திலும் மராட்டியம் ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றிய போது எடுத்தபடம்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றிய போது எடுத்தபடம்.
Published on

66 ஆயிரம் அனுமதிகள்

மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் என அறிக்கப்பட்டது. அதன்படி நேற்று கவர்னர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டசபை, மேல்-சபை கூட்டு கூட்டத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:-

மராட்டியம் கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்பட்டபோதும், பல்வேறு தொழில்களை தொடங்க ஆன்லைன் வழியாக 66 ஆயிரம் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.தொழில்துறையில் மந்த நிலை நிலவிய இந்த சமயத்திலும் மராட்டியம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை எளிதாக்குவதற்காக, மராட்டிய அரசு மகா வேலைவாய்ப்பு போர்டல் திட்டத்தை உருவாக்கியது.இதேபோல பிளக் அண்டு பிளே மற்றும் மகாபர்வானா போன்ற திட்டங்கள் தொழில்துறை வளர்ச்சியை தூண்டிவிட்டன.

விவசாய கடன்

அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும், மகாத்மா ஜோதிராவ் புலே ஹெத்காரி கர்ஜ்முக்தி யோஜனா திட்டத்தின் கீழ் 30 லட்சத்து 85 ஆயிரம் விவசாயிகளின் கடன் தொகையான ரூ.19 ஆயிரத்து 684 கோடியை மாநில அரசு செலுத்தி உள்ளது.இந்த கடினமான ஆண்டிலும் இதற்காக ரூ7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மும்பை ஆரே பகுதியில் உள்ள 800 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது. இதேபோல மேலும் 8 ஆயிரத்து 500 ஹெக்டேர் சதுப்பு நிலப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1500 ஹெக்டேர் மாங்குரோவ் சதுப்புநில பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து பூர்வாங்க அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

சிவ் போஜன்

மாநில அரசு கடந்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் சிவ் போஜன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்த திட்டத்தின் கீழ் ரூ.5-க்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசு ரூ.125 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் வெற்றியை தினசரி வழங்கப்படும் உணவு எண்ணிக்கை 18 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 38 ஆயிரமாக அதிகரித்ததன் மூலமாக அறிந்துகொள்ள முடியும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோதுமை, அரிசி மற்றும் உணவு தானியங்கள் சுமார் 7 கோடி மக்களுக்கு வெறும் 1 ரூபாயில் இருந்து 3 ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் தற்கொலை அதிகமாக உள்ள 14 மாவட்டங்களில் ரூ750 கோடி செலவில் 40 லட்சம் விவசாயிகளுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள்

ஊரடங்கு சமயத்தில் மராட்டியத்தில் சிக்கி ஊர் செல்ல முடியாமல் தவித்துவந்த வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப சிறப்பு ரெயில் மற்றும் பஸ்களை மராட்டிய அரசு ஏற்பாடு செய்தது.அதுமட்டும் இன்றி ரூ.816 கோடி செலவில் வெளிமாநிலத்தவருக்காக தற்காலிக தங்குமிடம், உணவு, உடை, மருத்துவ சிகிச்சை வசதி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.

புயல் நிவாரணம்

கடந்த ஆண்டு கொங்கன் கடலோர பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.609 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டது.நாக்பூரில் வெள்ள நிவாரணத்திற்காக ரூ.179 கோடி வழங்கப்பட்டது.2020 ஜூன் முதல் அக்டோபர் வரை பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் கால்நடைகள், விவசாய பயிர்கள், வீடுகள் மற்றும் பொது சொத்துகள் கடுமையான சேதத்திற்கு ஆளானது. அதேபோல உயிர்சேதங்களும் ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய ரூ.10 ஆயிரம் கோடி தொகுப்பு அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் உரையில் கூறினார்.

சட்டசபையில் வருகிற 8-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com