

பெங்களூரு,
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, தண்டனைக் காலம் முடிந்து நேற்று விடுதலையானார். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் சசிகலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தாலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு நாட்களுக்குப் பிறகு தற்போது சசிகலாவிற்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து மாறுபட்டு வருவதாகவும், அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிகிச்சைக்கு சசிகலா ஒத்துழைப்பு தருகிறார் என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலாவின் விடுதலையை சிறைத்துறை நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது வரை உடல்நல பாதிப்பால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண நலம் பெற பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.