

புதுடெல்லி,
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று, பாரத் பெட்ரோலிய நிறுவனம். இந்த நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிற நிறுவனம் ஆகும். கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்த நிறுவனம், நிகர லாபமாக ரூ.2,051.43 கோடி ஈட்டியது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த லாபம் 3 மடங்கு ஆகும். ஆனால் இந்த நிறுவனத்தில் தனக்கு உரிய 52.98 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை கடந்த நவம்பர் மாதமே அளித்துவிட்டது. அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் கீழான நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் (அசாம்) மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இப்போது பாரத் பெட்ரோலிய கழகத்தின் 52.98 சதவீத பங்குகளை வாங்குவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பங்குகளை வாங்க விரும்புவோருக்கு 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.73 ஆயிரம் கோடி) சொத்துகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.