

பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார். கூட்டணி அரசு கவிழ சித்தராமையா தான் காரணம் என்று தேவேகவுடா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இதற்கு பதிலளித்த சித்தராமையா, கூட்டணி அரசு கவிழ தேவேகவுடா மற்றும் அவரது மகன்கள் தான் காரணம் என்று கூறினார். இதனால் சித்தராமையா மற்றும் தேவேகவுடா இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, ஒரு ஆன்-லைன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
சித்தராமையாதான் எனது முதல் எதிரி. நான் முதல்-மந்திரி ஆனது அவருக்கு பிடிக்கவில்லை. அவரால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கூட்டணி அரசுக்கு எதிராக செயல்படும்படி அவர் தூண்டிவிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவுக்கு அவர்தான் நேரடி காரணம்.
கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. ஆனால் இது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எடுத்த சில முடிவுகளை அவரால் ஏற்க முடியவில்லை. அதனால் கூட்டணி அரசை கவிழ்க்க அவர் தொடர்ந்து சதி செய்து வந்தார்.
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கும் சித்தராமையாவே காரணம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருந்தபோதும், அதை சித்தராமையா அனுமதிக்கவில்லை.
நான் முதல்-மந்திரி பதவியில் அமர்ந்த நாள் முதலே, எனக்கு எதிராக அவர் கத்தியை கூர்தீட்டும் பணியில் ஈடுபட்டார். காங்கிரஸ் மேலிடத்தின் பேச்சுக்கும், சித்தராமையா மரியாதை கொடுக்கவில்லை. கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக இருக்கவில்லை, கிளார்க்கை போல் பணியாற்றினேன். தான் மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று சித்தராமையா விரும்பினார். அதனால்தான் இவ்வளவு குழப்பங்கள். இவ்வாறு குமாரசாமி கூறினார்.
காங்கிரஸ் மீது தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் தொடர்ந்து குற்றம்சாட்டி பேசி வருகிறார்கள். அதற்கு சித்தராமையா மட்டுமே பதிலளித்துள்ளார். இந்த மோதலை காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் மவுனமாக இருந்து வேடிக்கை பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.