சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு காங்கிரஸ், தி.மு.க. எதிர்ப்பு - நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு

சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு காங்கிரஸ், தி.மு.க. எதிர்ப்பு - நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியவுடன், வழக்கம்போல் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் தொடங்கியதும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர். அவர்களுடன் தி.மு.க., தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.

எங்களுக்கு நீதி வேண்டும், சர்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், எதிர்க்கட்சிகளை தாக்குவதை நிறுத்துங்கள் என்று பலவாறாக கோஷமிட்டனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு குழு (கருப்பு பூனைப்படை) பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அவர்கள் கோஷமிட்டனர். பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களின் அமளிக்கிடையே கேள்வி நேரம் நடந்தது.

கேள்வி நேரம் முடிந்த பிறகு, பூஜ்ய நேரத்தில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதே பிரச்சினையை எழுப்பினார். இதுதொடர்பாக அவர் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லா தள்ளுபடி செய்த பிறகும் அவர் பேசினார்.

அவர் பேசியதாவது:-

சோனியா காந்தி குடும்பத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற்றிருக்கக்கூடாது. பாதுகாப்பை நீக்கியதில் ஏதோ சதித்திட்டம் உள்ளது. வாஜ்பாய் தலைமையிலான அரசு கூட இந்த பாதுகாப்பை வாபஸ் பெறவில்லை. ஆகவே, மீண்டும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசினார். அவர் பேசுகையில், சோனியா காந்தி குடும்பத்துக்கு பாதுகாப்பை நீக்கியதால், அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால், நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல், பூஜ்ய நேரத்தில் இந்த பிரச்சினையை எழுப்பக்கூடாது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டபோது, அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியபடி இருந்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

ஒருகட்டத்தில் அவர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். சபையின் மையப்பகுதியில் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமானதாக இருக்கலாம். ஆனால் இன்று முதல், அங்கு யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. மீறினால், நான் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்று அவர் கூறினார்.

இருக்கைக்கு திரும்பினால், துணைக்கேள்வி கேட்க வாய்ப்பு தருவேன் என்றும் அமளியில் ஈடுபட்டவர்களை பார்த்து மற்றொரு சமயத்தில் அவர் கூறினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று கூடியவுடன், நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சபை அலுவல்கள் தொடங்கியதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பற்றியும், காஷ்மீரில் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டது பற்றியும் அவர்கள் பிரச்சினை எழுப்பினர்.

அதற்கு சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, நீங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசுக்காக சபை அலுவல்களை ரத்து செய்ய முடியாது என்று கூறினார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால், சபையை தள்ளிவைக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும், உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபையை பிற்பகல் 2 மணிவரை வெங்கையா நாயுடு தள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com