பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம்: பெட்ரோலியத்துறை மந்திரி

பெட்ரோலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர மாநிலங்கள் விரும்பாததால்தான் பெட்ரோல் விலை குறையவில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி கூறினார்.
பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம்: பெட்ரோலியத்துறை மந்திரி
Published on

ஜி.எஸ்.டி. வரம்பு

மேற்கு வங்காள மாநிலம் பவானிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து களமிறங்கும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, கொல்கத்தாவுக்கு சென்றார்.

அங்கு ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-

மேற்கு வங்காள அரசு அதிக வரி விதிப்பதால் இங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி விட்டது. பெட்ரோல் விலை குறைய விரும்புகிறீர்களா என்று கேட்டால், நான் ஆமாம் என்றுதான் சொல்வேன்.பிறகு ஏன் விலை குறையவில்லை? என்று கேட்டால், பெட்ரோலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர மாநிலங்கள் விரும்பாததுதான் அதற்கு காரணம் என்று சொல்வேன்.

மத்திய அரசுக்கு ரூ.32

பெட்ரோல் மீது லிட்டருக்கு 32 ரூபாய் மட்டுமே மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 19 டாலராக இருந்தபோதும், ரூ.32 வசூலித்தோம். பீப்பாய்க்கு 75 டாலராக உயர்ந்த பிறகும் அதே ரூ.32 மட்டுமே வசூலிக்கிறோம்.இந்த 32 ரூபாயில்தான், இலவச ரேஷன் பொருட்கள், இலவச வீடு, இலவச சமையல் கியாஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களை வழங்கி வருகிறோம்.மேற்கு வங்காள மாநில அரசு கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் விலையை ரூ.3.51 உயர்த்தியது. இல்லாவிட்டால், விலை லிட்டருக்கு ரூ.100-க்கு கீழ்தான் இருக்கும். மேற்கு வங்காளத்தில் பெட்ரோல் மீதான மொத்த வரிவிதிப்பு 40 சதவீதமாக உள்ளது.

பா.ஜனதா வெற்றி பெறும்

பவானிபூர் இடைத்தேர்தல் முடிவு, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதுதான் என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறுகிறது. பிறகு ஏன் ஒட்டுமொத்த மந்திரிசபையும் இங்கு பிரசாரம் செய்து வருகிறது? இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி உறுதி. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை பற்றித்தான் கவலையாக இருக்கிறது.பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசில் நடந்த மாற்றம் காமெடியாக உள்ளது. அக்கட்சி இறுதிக்கட்ட வீழ்ச்சியில் இருப்பதை உணர்த்துகிறது. எல்லா மாநிலங்களிலும் தோல்வி அடைந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் நடந்த நிகழ்வுகள், குடியுரிமை திருத்த சட்டம் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்துகின்றன. அகதிகளாக வந்தவர்களை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தவர்கள் இப்போது கேலிப்பொருளாக காட்சி அளிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com