இருவருக்கும் இடையேயான உறவு அதிகப்படியான காதல் கொண்டது- ஜாக்லின் குறித்து சுகேஷ் சந்திரா கருத்து

சுகேஷ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக இவர்மீது புகார்கள் உள்ளன.

அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக அவரது காதலி லீனா மரியாவிடமும், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ரூ. 10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்தது குறிப்பிடப்பட்டு இருந்தது. சுகேஷ் சந்திரசேகர், நடிகையின் விமானம், அவரது ஓட்டல் மற்றும் உணவுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

சுகேஷ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருகிறது.

ஜாக்குலின், பணத்திற்காகத்தான் சுகேசுடன் பழகினார் என்று செய்திகள் வெளியானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக திகார் சிறையில் இருந்து சுகேஷ் ஒரு கடிதம் எழுதி அதனை தனது வழக்கறிஞர் மூலம் வெளியிட்டு உள்ளார்.

அக்கடிதத்தில், ``நான் இதற்கு முன்பு சொன்னது போல் நானும், ஜாக்குலினும் உறவில் இருந்தோம். நீங்கள் சித்தரிப்பது போல் எங்களது உறவு பணத்திற்கான உருவானது கிடையாது. ஜாக்குலினை அது போன்று மோசமாக சித்தரிக்காதீர்கள். நானும் ஜாக்குலினும் சேர்ந்து இருப்பது போன்ற எங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியானது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

நான் ஜாக்குலினுக்கும் அவரது குடும்பத்திற்கும் கொடுத்த பரிசுப்பொருட்கள் காதல் உறவில் இருக்கும் ஒருவருக்கு கொடுக்கும் வழக்கமான ஒன்றுதான். இதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜாக்குலினுக்கு கொடுத்த பரிசுப்பொருட்கள் அனைத்தும் சட்டப்படி சம்பாதித்தது ஆகும். குற்றச்செயல்கள் மூலம் அவை சம்பாதிக்கப்படவில்லை என்பதை விரைவில் நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன். ஜாக்குலின் மீது இதில் எந்த வித தவறும் செய்யவில்லை.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் காதலித்ததை தவிர வேறு எந்த தவறும் அவர் செய்யவில்லை. இருவருக்கும் இடையிலான உறவு அதிகப்படியான காதலை கொண்டது. எந்தவித எதிர்பார்ப்பையும் கொண்டது கிடையாது. அதனால் தயவு செய்து ஜாக்குலினை தவறாக சித்தரிப்பதை அனைவரும் நிறுத்துங்கள். பணமோசடி வழக்கில் அவருக்கு எந்த வித தொடர்பும் கிடையாது என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையிலும் சுகேஷ், நடிகை ஜாக்குலின் பெயரை தெரிவிக்கவில்லை. எனவேதான் அமலாக்கப்பிரிவு அவரை கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com