

புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தின் லகிம்பூர் கெரி மாவட்டத்தின் லகிம்பூரில் கடந்த 10-ந் தேதி பாஜகவினர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், 1 பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், லகிம்பூர் வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, லகிம்பூர் வன்முறையில் யார் மீதெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது?, யார் மீதெல்லாம் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை), பதிவு செய்யப்பட்டுள்ளது?, யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்? விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பதை நாளைக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை (செப்.8) நடைபெறும் என்று கூறிய தலைமை நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.