

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (என்.சி.ஆர்.) காற்று மாசு பிரச்சினை குறித்து 1985-ம் ஆண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி. மேத்தா ஒரு பொது நல வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக திரட்டப்படுகிற நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவது குறித்து நீதிபதிகள் மிகுந்த வேதனை தெரிவித்தனர்.
குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக திரட்டப்பட்ட நிதி, அந்த நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், அதன் மூலம் மக்கள் பலன் பெற வேண்டும் என்பதை நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
அப்போது நீதிபதிகள், அரசாங்கம் தங்களை ஏமாற்றுவதாக ஆதங்கப்பட்டனர். அவர்கள் கூறியதாவது:-
எந்த நோக்கத்துக்கு நிதி ஒப்படைக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை விட்டு, பிற வகையில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. கோர்ட்டு எவ்வளவு தூரம் செயல்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? நிர்வாகத்தின் மீது (அரசாங்கத்தின் மீது) நாங்கள் நம்பிக்கை வைத்தோம். ஆனால் அவர்களோ எங்களுக்கு எது விருப்பமோ, அதைத் தான் செய்வோம் என செயல்படுகிறார்கள்.
இது நம்பிக்கை துரோகம் ஆகும்.
நாங்கள் என்ன போலீஸ்காரர்களா அல்லது புலனாய்வு அதிகாரிகளா? நாங்கள் ஒரு சிறிய தொகையைப் பற்றி பேசவில்லை. இது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.
இழப்பீட்டு துறையின் நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்திடம் ரூ.11 ஆயிரத்து 700 கோடி நிதி இருந்தது. இது கோர்ட்டு உத்தரவின்கீழ் உருவாக்கப்பட்டது. இப்படி ரூ.1 லட்சம் கோடி நிதி மொத்தம் சேர்ந்து இருக்கும்.
நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறினோம்? அதன்படி நீங்கள் (அரசாங்கம்) வேலை செய்வது இல்லை. இது கற்பனைக்கு அப்பாற்பட்டது.
நாங்கள் ஏதாவது சொன்னால் அது நீதித்துறையின் வரம்பு மீறிய செயல் என்று சொல்கிறீர்கள். நாங்கள் நிர்வாகத்தால் ஏமாற்றத்துக்கு ஆளாகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் ஆதங்கப்பட்டனர்.
மத்திய அரசு பதில்
இதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ். நட்கர்னி பதில் அளிக்கையில் இந்த நிதிகளை எங்கே எப்படி செலவு செய்ய வேண்டும், எங்கே செலவு செய்யக்கூடாது என்பதை கோர்ட்டு, மத்திய அரசுக்கு சொல்ல வேண்டும். இதை உள்ளாட்சி நோக்கங்களுக்காக செலவிட முடியாது என கூறினார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ரூ.1 லட்சம் கோடியை எந்த வகையில் செலவிடலாம் என எண்ணி இருக்கிறீர்கள், எதில் செலவிடக்கூடாது என்பதை எங்களுக்கு காட்டுங்கள் என்றனர்.
அத்துடன் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.