

புதுடெல்லி,
தனி நபரை பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்யும் வகையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக 1967-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக, சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) மசோதாவை இயற்றியது.
பயங்கரவாத தடுப்பு மசோதா என அழைக்கப்படுகிற இந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் ஜூலை 24-ந் தேதியும், மாநிலங்களவையில் இந்த மாதம் 2-ந் தேதியும் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து கடந்த 8-ந் தேதி இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இந்த சட்டத்தின்படி, தனி நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியும்.
இந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த சாஜல் அவஸ்தி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், இந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் தனி மனிதர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து கைது செய்ய வழி செய்கிறது. இந்த சட்டம் பொதுமக்களின் அடிப்படை உரிமை, பேச்சுரிமை, வாழும் உரிமை ஆகியவற்றுக்கு எதிரானது. அரசியல் சாசன பிரிவுகள் 14இ, 19இ, 21 ஆகியவற்றுக்கு எதிரானது என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.