மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Published on

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் ஒரு நோயாளி மரணம் அடைந்தார். உடனே ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரை அடித்து உதைத்தனர். இதில் டாக்டரின் மண்டை உடைந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். மேற்கு வங்காளத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலை நிறுத்தத்தை டாக்டர்கள் வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும், மேற்கு வங்க அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு, டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை எனக்கூறியதோடு, உத்தரவை எதையும் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. விடுமுறை முடிந்த பிறகு, உரிய அமர்வு முன் இந்த மனு பட்டியலிப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com