

புதுடெல்லி/ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கும், வன்முறையை தூண்டிவிட பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தானில் இருந்து பணம் வந்தது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணையில் பிரிவினைவாதிகளின் முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக சிக்கி வருகின்றனர், கைது நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று தேசிய புலனாய்வு பிரிவினர் பயங்கரவாத நிதியகம் தொடர்பாக சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர், பாரமுல்லா மற்றும் ஹந்த்வாராவில் 12 இடங்களில் சோதனையில் தேசிய புலனாய்வு பிரிவு ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது கிடைக்கப்பட்ட தகவல்களை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வருகிறது. அவ்வரிசையில் இப்போதைய சோதனையும் நடந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி பயங்கரவாத செயல்கள், பள்ளத்தாக்கு பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த வன்முறை செயல்களுக்கு நிதி உதவி தொடர்பாக 7 பேரை கைது செய்தது.
பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு பணம் வழங்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் நாட்டிற்கு எதிராக போரை தொடுத்து உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவர்கள் மீது சட்டவிரேத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் இந்தியாவிற்கு எதிரான போராட்டம் மற்றும் பந்த் மூலம் அமைதியின்மையையும் ஏற்படுத்தி உள்ளனர் என தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்து உள்ளது.