பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது - அ.தி.மு.க. வெளிநடப்பு

பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது - அ.தி.மு.க. வெளிநடப்பு
Published on

புதுடெல்லி,

பொருளாதாரரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்தார். சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொருளாதாரரீதியாக முன்னேறியவர்களுடன் போட்டியிட முடியாமல், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினர் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் சேர முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினரின் மேம்பாட்டுக்காக சிறப்பு சலுகை அளிக்க மாநிலங்களை அனுமதிக்கும் வகையில், அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவில் திருத்தம் செய்ய இம்மசோதா கோருகிறது.

இதன்படி, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களில் சேர சிறப்பு சலுகை அளிக்கலாம். தற்போதைய இடஒதுக்கீட்டு அளவை விட கூடுதலாக 10 சதவீதத்துக்கு மிகாமல் இடஒதுக்கீடு அளிக்கலாம். இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம், நாடாளுமன்றத்தில் ஏற்கனவே 21 தடவை பேசப்பட்டுள்ளது. இதை பரிசீலிக்கலாம் என்று மண்டல் கமிஷன் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரது ஆட்சி காலங்களில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறினார்.

மசோதா மீதான விவாதத்தில், மத்திய அரசு சார்பில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசினார். அப்போது, இம்மசோதா அனைத்து குடிமக்களுக்கும் சம அந்தஸ்தையும், வாய்ப்பையும் உறுதி செய்கிறது என்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய கே.வி.தாமஸ், மசோதாவை ஆதரித்தார்.

அ.தி.மு.க. சார்பில் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மசோதாவை எதிர்த்து பேசினார். பொருளாதார அளவுகோல் அடிக்கடி மாறக்கூடியது என்பதால், அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று அவர் கூறினார்.

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், மசோதாவை ஆதரித்து பேசினார்.

4 மணி நேர விவாதத்துக்கு பிறகு, இரவு 10 மணியளவில், இடஒதுக்கீட்டு மசோதா மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 323 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர். யாரும் ஓட்டெடுப்பை புறக்கணிக்கவில்லை.

எனவே, மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தம்பிதுரை உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதா நிறைவேறியதாக அறிவித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபைக்கு வந்திருந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத ஆதரவுடன் மசோதா நிறைவேறி இருப்பதாக கூறினார். மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) இம்மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அப்போது, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, அத்வானி உள்ளிட்டோர் சபையில் இருந்தனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்கள், இந்தியாவில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் குடியிருந்தால் இந்திய குடியுரிமை வழங்குவதற்கான மசோதா, கடந்த 2016-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அம்மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழு, சில திருத்தங்களுடன் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, இந்த மசோதாவை நேற்று மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார். அப்போது, இந்த மசோதா அசாம் மாநிலத்துக்கு மட்டுமானது அல்ல, அசாம் பூர்வகுடி மக்களை பாதுகாப்போம் என்று அவர் கூறினார்.

மசோதாவுக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். இதை வலியுறுத்தி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இருப்பினும், விவாதத்துக்கு பிறகு மசோதா நிறைவேறியது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிப்பதற்கான மசோதாவை மத்திய பெண்கள் நலத்துறை இணை மந்திரி வீரேந்திர குமார் தாக்கல் செய்தார். பேச்சுவார்த்தையில் பங்கேற்க தகுதியான தொழிற்சங்கங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான மசோதாவை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் குமார் கங்க்வார் தாக்கல் செய்தார்.

குற்ற வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை கண்டறியும் மரபணு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதா, மக்களவையில் நிறைவேறியது. இந்த கூட்டத்தொடரில் முதல்முறையாக நேற்று கேள்வி நேரம் அமளியின்றி நடந்தது.

மக்களவை, நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com