

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமையன்று மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். இதன்படி பிரதமர் மோடி இன்று பேசும்பொழுது, சமீபத்திய வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய சந்தர்ப்பங்களுக்கான கதவுகளை திறந்துள்ளன. பல அரசியல் கட்சிகளால் உறுதி அளிக்கப்பட்ட விவசாயிகளின் தசாப்தகால பழமையான வேண்டுகோள்கள் தற்பொழுது தீர்க்கப்பட்டு உள்ளன.
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறிய வேளாண் சீர்திருத்த சட்டங்கள், விவசாயிகளுக்கான தடைகளை உடைத்தது மட்டுமின்றி, அவர்களுக்கான புதிய உரிமைகள் மற்றும் வாய்ப்புகளையும் வழங்கி உள்ளன.
இச்சட்டத்தின் கீழ், வேளாண் கொள்முதல் பொருட்களுக்கு 3 நாட்களுக்குள் விவசாயிகளிடம் பணம் வழங்க வேண்டியது கட்டாயம். பணம் சென்று சேரவில்லை எனில் விவசாயி புகார் அளிக்கலாம்.
இதில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் ஒரு மாதத்திற்குள் விவசாயியின் புகாரை பற்றி விசாரிக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக நடந்த ஒரு சம்பவம் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மராட்டியத்தின் துலே நகரில் ஜிதேந்திரா போய்ஜி என்ற விவசாயி இந்த புதிய வேளாண் சட்டங்களை பயன்படுத்தி உள்ளார்.
அவர் மக்கா சோளம் பயிரிட்டு சரியான விலைக்கு விற்க முடிவு செய்துள்ளார். மொத்தம் ரூ.3.32 லட்சம் அவருக்கு கொடுப்பது என ஒப்புதலானது. இதற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் முன்பணம் கொடுக்கப்பட்டது.
15 நாட்களில் அவருக்கு மீதி தொகை கிடைக்கும் என ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தொகையை பெறவில்லை. இதுபற்றி புகார் அளித்த ஒரு சில நாட்களில் மீதி தொகை அவருக்கு வந்து சேர்ந்தது என கூறியுள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கிய பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் வேளாண் சீர்திருத்த சட்டங்களை வாபஸ் பெற கோரி டிராக்டரிலும் மற்றும் கால்நடையாக நடந்து சென்றும் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.