

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ரட்டிஹள்ளி தாலுகா சிரகாம்பி கிராமத்தை சேர்ந்தவர் டோபனாகவுடா. இவருக்கு திருமணமாகி மல்லம்மா என்ற மனைவி இருந்தார். இதில் மல்லம்மா கடந்த 2021-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். ஆகையால் டோபனாகவுடா தனது மனைவிக்கு இறப்பு சான்றிதழ் வாங்க ஹாவேரி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றார்.
பின்னர் அங்கு தனது மனைவியின் சுயவிவரங்கள் மற்றும் டோபனாகவுடாவின் சுயவிவரங்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இதில் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் டோபனாகவுடா இறந்து விட்டதாக பதிவு செய்துள்ளனர். பின்னர் சிறிது நாட்களில் டோபனாகவுடாவுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரேஷன் பொருட்கள் போன்ற பல்வேறு அரசு சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டோபனாகவுடா விசாரித்தபோது மனைவி பெயரில் வரவேண்டிய இறப்பு சான்றிதழ் தவறுதலாக தனது பெயரில் வந்தது தெரியவந்தது. பின்னர் உடனடியாக டோபனா கவுடா இதுகுறித்து தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்துள்ளார்.