நீட் முதுநிலை தேர்வுக்கு தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ தேர்வு மே 21ஆம் தேதி நடைபெறுகிறது.
நீட் முதுநிலை தேர்வுக்கு தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

முதுநிலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் முதுநிலை நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தேர்வு தொடர்பான தகவல்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மருத்துவ மாணவர்கள் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2021 - 2022 ஆண்டுக்கான நீட் முதுகலை கலந்தாய்வே இன்னும் முடியவில்லை .அதற்குள் மே 21ம் தேதி முதுகலை நீட் நுழைவுத்தேர்வு எப்படி நடத்த முடியும்? என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதன் பின்னர் நீட் முதுநிலை தேர்வை தள்ளிவைத்தால் உள்ளுறை மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும், நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும் முதுநிலை நீட் 2022 தேர்வு நடக்கும் தேதியில் மாற்றம் இல்லை எனவும் மே 21-ஆம் தேதி திட்டமிட்டபடி நீட் முதுநிலை தேர்வை நடத்துவதற்கு தடையில்லை என நீதிபதிகள் உத்தவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com