டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் யோகா பயிற்சி “நலமுடன் வாழ யோகா” ஜனாதிபதி பேச்சு

நலமுடன் வாழ்வதற்கு யோகா முழுமையான அணுகுமுறை என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.
டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் யோகா பயிற்சி “நலமுடன் வாழ யோகா” ஜனாதிபதி பேச்சு
Published on

புதுடெல்லி,

ஆண்டுதோறும், ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து யோகா தினம் உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று 3-வது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில், மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு யோகா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும், நலமுடன் வாழ்வதற்கும் யோகா ஒரு முழுமையான அணுகுமுறை ஆகும் என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர் பங்கேற்பு

டெல்லி கென்னாட் பிளேஸ்சில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, விஜய் கோயல், டெல்லி துணைநிலை கவர்னர் அனில் பைஜால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜனதா மூத்த தலைவர் மீனாட்சி லேகி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்க வந்தபோது ராம்நாத் கோவிந்த், நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், நாம் அனைவரும் இங்கே யோகா செய்வதற்காக கூடி உள்ளோம். ஒவ்வொருவரும் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

பிரம்மகுமாரிகள்

டெல்லி செங்கோட்டையில் பிரம்மகுமாரிகள் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மழைக்கு மத்தியிலும் அனைவரும் ஆர்வமுடன் யோகா பயிற்சி செய்தது, அவர்களின் ஆர்வத்தை பறை சாற்றுவதாக அமைந்தது.

இதில் மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன், பா.ஜனதா எம்.பி., சாக்ஷி மகராஜ், டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

டி.டி.ஏ. பூங்கா

டெல்லி பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (டி.டி.ஏ.), சுவர்ண ஜெயந்தி பூங்காவில், பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் திரளானோர் ஆர்வமுடன் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதே போன்று அஜ்மல்கான் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்களில் நடந்த யோகா பயிற்சியிலும் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com