

புதுடெல்லி,கூடங்குளத்தில் உள்ள அணுஉலைகளில் மின்சார உற்பத்தி அடிக்கடி நிறுத்தப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடு காரணங்களால் தான் இப்படி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் 3 மற்றும் 4வது அலகுகளை தொடங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதனால் அணுஉலைகளை சுற்றி வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த அச்சத்திலும், பெருத்த கவலையிலும் உள்ளனர்.
எனவே, மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக முதல் 2 அணு உலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பிறகே 3 மற்றும் 4வது உலைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முதல் 2 உலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறதா? என்பதை சுதந்திரமான நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே தர வேண்டும். மேலும், அணு உலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் நேற்று மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங்கிடம் நேரில் அளித்தனர்.
கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அலகு அணு உலைகளை அமைப்பதில் மத்திய அரசு தீர்க்கமாக உள்ளது. முதல் 2 அணு உலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறியிருப்பதால், உள்ளூர் விஞ்ஞானிகள் (கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள்) மற்றும் மும்பையில் உள்ள அணு ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிகள் அடங்கிய குழு அது குறித்து ஆய்வு மேற்கொள்ளும். இந்த குழுவுடன் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் இருப்பார்கள்.
அணுஉலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீதம் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்படும். 35 சதவீதம் அண்டை மாநிலங்களுக்கும், 15 சதவீதம் மத்திய தொகுப்புக்கும் வழங்கப்படும். முழு மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்வோம். 3வது அலகு அணுஉலை பணிகள் அடுத்த ஆண்டு (2018) தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.