பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை
Published on

சென்னை,

தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவருக்கு சொந்தமான போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திலும், ஜெயா டி.வி. அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் தொடர்புடைய வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு சசிகலா தங்கியிருந்த அறையிலும் சோதனை நடத்தினர். அங்கு சில முக்கியமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியாக கூறப்படுகிறது. இந்த சோதனையை அடுத்து ஜெயா டி.வி. நிர்வாகி உள்பட பல்வேறு நபர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த 2 நாட்கள் அனுமதி வழங்க கோரி கர்நாடக அரசின் சிறைத்துறை நிர்வாகத்திற்கு வருமான வரித்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

அதற்கு 13 மற்றும் 14-ந் தேதி சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறைத்துறை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியது. அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 11 மணியளவில் ஒரு காரில் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறைக்கு வந்தனர்.

அதிகாரி வீரராகவராவ் தலைமையில் வந்த 5 பேர் கொண்ட குழுவில் ஒரு பெண் அதிகாரியும் இடம் பெற்றிருந்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கான அனுமதி கடிதத்தை சிறை அதிகாரிகளிடம் காண்பித்தனர். அதன்பிறகு வருமான வரித்துறையை அதிகாரிகள் சிறைக்குள் சென்றனர்.

இந்த விசாரணைக்காக சிறைக்குள் ஒரு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வைத்து சசிகலாவிடம் வருமான வரி அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றனர். மதிய உணவுக்காக சசிகலாவுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது.

காலை 11 மணிக்கு சிறைக்குள் சென்ற அதிகாரிகள் மாலை 6 மணியளவில் வெளியே வந்தனர். 7 மணி நேரத்திற்கும் அதிகமாக சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று 2-வது நாளாக சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. இதில் பல முக்கிய தகவல் கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சசிகலாவிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com