மக்களவையில் இன்று ‘முத்தலாக்’ மசோதா மீது விவாதம்

மக்களவையில் இன்று ‘முத்தலாக்’ மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது.
மக்களவையில் இன்று ‘முத்தலாக்’ மசோதா மீது விவாதம்
Published on

புதுடெல்லி,

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2018 ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி முத்தலாக் முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும், இதன்மூலம் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டமசோதா சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தது.

இதில் மத்திய அரசு, விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் வழங்குவது உள்பட சில திருத்தங்களை செய்தது. ஆனாலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக திருத்தங்களையும் சேர்த்து ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவை சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார். அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் முத்தலாக் முறைக்கு எதிராக புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

மசோதா கடந்த 20ந் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள விரும்புகிறது, எனவே இந்த விவாதத்தை 27ந் தேதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜனை கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் வாக்குறுதியும் அளித்தார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி நரேந்திர சிங் தோமரும் இதை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி முத்தலாக் மசோதா, கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடுகிற மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த மசோதா, மக்களவையில் இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதால் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் சபைக்கு வருவதற்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு மறுபடியும் முட்டுக்கட்டை நேரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

முத்தலாக் தடையை மீறி ஒருவர் செயல்பட்டால், அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க முத்தலாக் மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. அவசர சட்டத்தின் ஆயுள் 6 மாதம் தான். நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய 42 நாளில் மசோதா நிறைவேறி விட வேண்டும். இல்லாத பட்சத்தில் அவசர சட்டம் காலாவதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com