வங்காளதேச பிரதமருக்கு அன்னாசி பழங்களை பரிசாக வழங்கிய திரிபுரா முதல் மந்திரி

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு திரிபுரா சார்பில் முதல் மந்திரி பிப்லப் குமார் அன்னாசி பழங்களை பரிசாக வழங்கியுள்ளார்.
வங்காளதேச பிரதமருக்கு அன்னாசி பழங்களை பரிசாக வழங்கிய திரிபுரா முதல் மந்திரி
Published on

அகர்தலா,

இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் அடையாளமாக கடந்த வாரம், பிரதமர் மோடி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் இதர தலைவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மொத்தம் 2 ஆயிரத்து 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பினார்.

260 பெட்டிகளில் இந்த மாம்பழங்கள் வைக்கப்பட்டு, சரக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. எல்லையை கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தபோது, கொல்கத்தாவில் உள்ள வங்காளதேச துணை தூதரகத்தின் முதன்மை செயலாளர் முகமது சமியுல் காதர் வரவேற்றார்.

இதுபோல், வங்காளதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கும் மாம்பழம் அனுப்பி வைக்க ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில், திரிபுரா முதல் மந்திரி பிப்லப் குமாருக்கு 300 கிலோ மாம்பழங்களை வங்காளதேசம் பரிசளித்துள்ளது. இதுபற்றி திரிபுராவின் அகர்தலா நகரில் அமைந்துள்ள வங்காளதேச தூதரகத்தின் துணை தூதர் கூறும்போது, இந்திய பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருக்கு நாங்கள் மாம்பழங்களை அனுப்பி வைத்தோம்.

திரிபுராவுடன் நாங்கள் வலிமையான நட்புறவை கொண்டுள்ளோம். அதனால் எங்களுடைய பிரதமர் ஷேக் ஹசீனா, திரிபுரா முதல் மந்திரிக்கு 300 கிலோ ஹரிபங்கா மாம்பழங்களை பரிசாக அளித்துள்ளார் என கூறினார்.

இந்நிலையில், திரிபுரா முதல் மந்திரி பிப்லப் குமார், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு திரிபுராவின் சார்பில் அன்னாசி பழங்களை பரிசாக வழங்கியுள்ளார்.

இதற்கு சிட்டகாங் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் செயலாளர் அளவிலான அதிகாரி உதோத் ஜா கூறும்போது, இந்த நல்லெண்ண நடவடிக்கைக்காக நாங்கள் திரிபுரா அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த பரிசானது நம்முடைய நட்புறவு மற்றும் வங்காளதேச அரசுடனான நீண்டகால பிணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com